கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (41-50)
வெ.விஜய்
சொல்லிய வார்த்தையிலே - கண்ணம்மா
சோகந் தெரியுதடி
மெல்ல நடைபயின்றே - என்றன்
மேனி தழுவிடடி (41)
விவேக்பாரதி
தழுவிடுந் தென்றல்தரும் - சில்லெனும்
தண்ணிலை உன்னினைவே
மழுவெனக் கண்ணுடையாய் - கண்ணம்மா
மதகரி முன் தோன்றினேன் (42)
நிறோஷ் ஞானச்செல்வம்
ஏனென்ற கேள்வியில்லை - கண்ணம்மா
என்றன் அருகிருக்க
நானென்ற எண்ணமில்லை - நீயென்றன்
ஞாலப் பெருந்துணையே! (43)
வெ.விஜய்
பெருமை என்றுணர்ந்தே - உன்னைப்
பெற்று வளர்த்தவளை
அருமை என்றுசொன்னேன் - கண்ணம்மா
அருகில் நிற்கையிலே (44)
விவேக்பாரதி
நிற்பது நீயானால் - கண்ணம்மா
நிலவுக்குக் காய்ச்சல்வரும்
சொற்பதம் நீயானால் - என்கவிச்
சோதி உயிர்பெறுமே (45)
நிறோஷ் ஞானச்செல்வம்
உயிர்பெற்ற தென்றன்வரம் - கண்ணம்மா
உன்பிறப்(பு) இங்குற்றதால்
அயிர்பெற்ற வாய்மொழியாய் - நெடுங்கார்
அளகத்தில் தளைக்குதியோ! (46)
(அயிர் – வெல்லம்)
வெ.விஜய்
குதிக்கு முள்ளத்தினை- கண்ணம்மா
கூவி அழைத்திடடி
பதித்த வைரங்களாய் - உன்றன்
பற்களும் மின்னுதடி (47)
விவேக்பாரதி
மின்னல் இழைத்தநகை - வெண்ணிலா
மின்னும் எழில்வதனம்
ஜன்னல் உரசும்மணம் - கண்ணம்மா
சாதனை உன்னுறவு (48)
நிறோஷ் ஞானச்செல்வம்
உறவு மாறிவிடும் - கண்ணம்மா
உலகம் பொய்த்துவிடும்
கறந்த பாலனையோய் - நின்னையும்
மறக்கக் கூடுவதோ (49)
வெ.விஜய்
தோகை மயிலிறகோ - கண்ணம்மா
தூய தேன்துளியோ
வாகை மரநிழலோ - உன்றன்
வருகை இனிக்குதடி (50)
தொடரும்...
Comments
Post a Comment