கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (31-40)
விவேக்பாரதி
வேண்டாத நேரமில்லை - கண்ணம்மா
விரும்பாத நாட்களில்லை
ஆண்டாள் உனைத்தொடவே - கிள்ளையாய்
ஆருடல் திரித்திடுவேன் (31)
நிறோஷ் ஞானச்செல்வம்
திரித்த நூல்நுனியில் - செஞ்சுடர்
திரளும் மணிவிளக்கே
சிரித்த மலர்முகமே - கண்ணம்மா
சிந்தை மிகுத்தவளே! (32)
விவேக்பாரதி
மிகுதிப் பொருள்கொடுத்தும் - வானத்தில்
மின்னல் இடிப்பதில்லை
தகுதிக் குறும்வினையாம் - கண்ணம்மா
தகுந்தநின் பார்வையைப்போல் (33)
நிறோஷ் ஞானச்செல்வம்
போர்க்கலை யறிந்தனவோ - நீகொண்ட
பொல்லாப் புருவவிற்கள்
பார்க்கையில் நாணேற்றும் - கண்ணம்மா
பாதகம் செய்யாதேடி! (34)
வெ.விஜய்
தேடும் பார்வையிலே - கண்ணம்மா
தீயும் நிறையுதடி
ஓடும் நதியினிலே - உன்றன்
உருவந் தெரியுதடி (35)
விவேக்பாரதி
உருவம் தெரிவதெல்லாம் - கண்ணம்மா
உன்றன் உருவமடி
கருவம் உடையநிலா - உன்முன்னே
கறையொடு தோன்றுமடி (36)
நிறோஷ் ஞானச்செல்வம்
மடியினில் தலைசாய்ப்பாய் - கண்ணம்மா
வருடியு னையணைப்பேன்
நொடியினில் காதல்தமிழ் - கவியென
நுவலுவை நீயல்லவோ (37)
வெ.விஜய்
நீயில்லா நேரத்திலே - கண்ணம்மா
நிலவும் வருவதிலையே
ஆயிரம் முத்தங்களைக் - கடல்
அலையும் பெறுவதிலையே (38)
விவேக்பாரதி
ஏங்கித் தவிப்பதெல்லாம் - கண்ணம்மா
என்றோ தொலைந்ததடி
தூங்கடி தோளணையில் - சொல்லினால்
தோகைக் கவரிசெய்வேன் (39)
நிறோஷ் ஞானச்செல்வம்
வேய்ங்குழல் இசைத்திடவோ - கண்ணம்மா
வீணையைப் பழகிடவோ
பாங்கியே உன்றனுக்கு - உற்றதொரு
வாத்தியம் ஏதுசொல்லு (40)
தொடரும்...
Comments
Post a Comment