கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (11-20)
விவேக்பாரதி
புகுந்த நாள்முதலாய்க் - கண்ணம்மா
புரியாப் பலநிகழ்வு!
புகழை வெறுத்துவிட்டேன் - மஞ்சமும்
புதரெனக் குத்துதடி (11)
நிறோஷ் ஞானச்செல்வம்
குத்தும் முட்களெலாம் - கண்ணம்மா
குவிமலர் ஆயினவோ
பித்துப் பிடித்ததுவோ - காட்சியிற்
பிழைகள் தோன்றுதடி! (12)
விவேக்பாரதி
தோன்றும் சுடர்களிலும் - கண்ணம்மா
தோகை உனதுமுகம்
ஊன்றிக் கிடக்குதடி - பிம்பங்கள்
உள்ளம் நிறைக்குதடி (13)
நிறோஷ் ஞானச்செல்வம்
நிறைந்த கதிரமுதே - கண்ணம்மா
நினைவி லெழுங்கலையே
உறைந்த அக்கினியே - உள்ளூர
ஒளிரும் தண்புனலே! (14)
விவேக்பாரதி
புனலுங் குளிர்கொடுக்கக் - கதிரவன்
புதுமை இதங்கொடுக்க
மனத்தில் நினைத்திருந்தேன் - கண்ணம்மா
மழையின் வடிவில்வந்தாய் (15)
நிறோஷ் ஞானச்செல்வம்
வந்தாய் வளமுற்றேன் - கண்ணம்மா
வதனப் பொலிவில்நிதம்
தந்தாய் புதுவிடியல் - என்றனுயிர்
தளைக்கும் காரிகையே! (16)
வெ.விஜய்
காரிகைக் கனிமொழியே - நீயெனக்குக்
கற்பகக் காமமடி
தூரிகைக் கூந்தலிலே - கண்ணம்மா
தொலைந்து போனேனடி (17)
விவேக்பாரதி
தொலைதூர மின்னலடி - கண்ணம்மா
தொடுந்தூரத் தென்றலடி
கலைநேரக் கவனமடி - நீயுந்தான்
கவிதையின் சொற்களடி (18)
நிறோஷ் ஞானச்செல்வம்
சொற்சுவைப் பொருளாகிறாய் - கண்ணம்மா
சோகத்திற் சுகமாகிறாய்
கற்குவை வாழ்தேரைநான் - ஊணிட்டுக்
காக்கின்ற இறையாகிறாய் (19)
வெ.விஜய்
இறைவன் தேடுகிறான் - என்னை
இமையில் மறைப்பவளே
உறைந்த பனித்துளியாய்க் - கண்ணம்மா
உள்ளம் கிடக்குதடி (20)
தொடரும்...

Comments
Post a Comment