கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (1-10)



நிறோஷ் ஞானச்செல்வம்: 

கொல்லயில் தானோடி கண்ணம்மா - நீ
        கோபச் செந்நிறமோ
ஒல்லைக் கெதிர்ப்பதமோ கண்ணம்மா - நீ
        ஓதக்கடல் நுரையோ! 

                                            ***
விவேக்பாரதி: 

வில்லின் விசையடிநீ - கண்ணம்மா
        வீசும் விழிச்சுடரில்! 
ஒல்லைக் கெதிர்ப்பதந்தான் - காதலின்
        ஒற்றை மொழிசொலவோ? (1) 

நிறோஷ் ஞானச்செல்வம்: 

சொல்லும் மொழிகளிலே - கண்ணம்மா
        சொக்க வைத்திடுவாய்
எல்லை எங்குளதோ - உன்னுடைய
        இன்பப் பூஞ்சிரிப்பில் (2) 

விவேக்பாரதி: 

சிரிப்பில் புதியவளே - கண்ணம்மா
        சிக்கிமுக்கி இதழே
உரசல் நெருப்புதரும் - குளிரினில்
        உடலம் நடுங்குகிறேன்! (3) 

நிறோஷ் ஞானச்செல்வம்: 

நடையே ஒயிலாகும் - கண்ணம்மா
        நகையே எழிலாகும்
விடையே என்வாழ்வாம் - அஃதைநீ
        விள்ளுவ தெப்போது? (4) 

விவேக்பாரதி: 

எப்பொழுதுன் சிரிப்பு? - கண்ணம்மா
        எப்பொழுதுன் னணைப்பு? 
எப்பொழுதுந் தவிப்பு - முன்னம்வா
        ஏக்கத்தளை யறுத்து (5) 

நிறோஷ் ஞானச்செல்வம்: 

அறுக்கும் கவலைகளைக் - கண்ணம்மா
        அறுக்கத் தெரிந்தவளே
இறுக்கும் கைகளிலே - என்னையிங்கு
        இயக்கும் ஒருவிசையே! (6) 

விவேக்பாரதி: 

விசையின் விதியடிநீ - உன்னுள்ளே
        விதைத்த கணமடிநான்
அசைவும் அமைதியுமாய்க் - கண்ணம்மா
        ஆகி இயக்குகிறாய் (7) 

நிறோஷ் ஞானச்செல்வம்: 

இயக்கம் நீயலவோ - கண்ணம்மா
        இயங்கா மோனமும்நீ
தயக்கம் உடைத்தெறிந்து - என்னாவி
        தழுவித் தேற்றுகின்றாய்! (8) 

விவேக்பாரதி: 

இன்றாய் நாளையுமாய்க் - கண்ணம்மா
        இதயத்தின் நேற்றுமென
நின்றாய் நெஞ்சுக்குள்ளே - உன்னைப்போய்
        நேரில் தொடத்துடித்தேன் (9) 

நிறோஷ் ஞானச்செல்வம்: 

துடித்த தென்பிழையே - கண்ணம்மா
        தூலம் தாண்டிவிட்டாய்
வடித்த பாட்டினிமை - போலுயிர்த்து
        வந்தென் உட்புகுந்தாய்! (10) 

தொடரும்...

Comments

Popular posts from this blog

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (31-40)

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (51-61)

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (41-50)