கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (21-30)


நிறோஷ் ஞானச்செல்வம்

கிடப்பில் பலசேதி - கண்ணம்மா

        கேட்பது யாரோடி

நடக்கப் போகையிலே - ஒவ்வொன்றாய்

        நாமவை பேசிடலாம் (21)

 

வெ.விஜய்


பேசும் பறவைகளைக் - கண்ணம்மா

        பேணி வளர்ப்பதுபோல்

வீசும் தென்றலுக்கும் - கண்ணம்மா 

        வெட்கத்தைக் கூறடியோ (22)


விவேக்பாரதி


அடிகள் அதிகம்பட்டு - நெஞ்சந்தான் 

        அழுது கதறுகையில் 

பிடியாய்த் துணைக்குவந்தாய் - கண்ணம்மா 

        பிழைத்தேன் உனதருளால் (23)

 

நிறோஷ் ஞானச்செல்வம்


ஆலப் பெருமரமாய்க் - கண்ணம்மா

        அன்பு நிலைத்திருக்கும்

கோலச் சித்திரமே - எண்ணத்திற்

        கொஞ்சும் தமிழழகே! (24)

   

வெ.விஜய்


அழகுக் கேற்றவொரு - கண்ணம்மா

        அன்பு இருக்குதடி 

நிழலும் பின்தொடரக் - கண்ணம்மா

        நெஞ்சம் நினைக்குதடி (25)


நிறோஷ் ஞானச்செல்வம்


நினைவில் இருப்பவளே - நேரினில்

        நிகழ்வதும் உன்னிருப்பே

நனைதல் இனிமையடி - கண்ணம்மா

        நாமன்பின் பொழிவினிலே! (26)

 

வெ.விஜய்


பொழியும் மேகங்களும் - கண்ணம்மா

        பொறுமை காக்குமடி

விழிகள் திறந்திடவே - நெஞ்சினில்

        வேலாய் இறங்குதடி (27)

 

நிறோஷ் ஞானச்செல்வம்


தடித்த வன்மமெலாம் - தம்நிலை

        தவித்தே ஓடிவிடும்

இடித்து நீயுரைப்பாய் - கண்ணம்மா

        ஏற்றம் தருகுவையே! (28)

 

வெ.விஜய்


தந்த சொற்களிலே - கண்ணம்மா

        தாகமுந் தீர்ந்ததடி

முந்தை இரவினிலே - உன்றன்

        முந்தியில் கிடக்கையிலே (29)

 

நிறோஷ் ஞானச்செல்வம்


கைகள் இணைத்திருப்போம் - நதியோரம்

        கதைத்தே நாம்நடப்போம்

உய்யும் வழியிதுவே- கண்ணம்மா

        உளறல் எனவேண்டா! (30)


தொடரும்...


Comments

Popular posts from this blog

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (31-40)

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (51-61)

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (41-50)