கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (51-61)

 


விவேக்பாரதி


இனிக்கும் மதுக்குடமே - கண்ணம்மா

        இன்பத் திரவியமே!

மனிதப் பிறவியிலே - நான்பெறும்

        மாண்புகள் உன்னருளே! (51)

 

நிறோஷ் ஞானச்செல்வம்


அருளொடு பொருளெல்லாம் - கண்ணம்மா

        அடைந்தனன் என்றிருந்தேன்

இருளெனும் மாயையடி - நீயல்லால்

        எல்லாமும் என்றனுக்கே! (52)

 

வெ.விஜய்


கேட்டதைக் கூறடியோ - கண்ணம்மா

        கேள்வியும் ஏனடியோ

பாட்டொன்று பாடடியோ - என்னைப்

        பத்திரம் போடடியோ (53)


விவேக்பாரதி


பாடல் பலமிழக்கும் - கண்ணம்மா

        பார்வைச் சுரத்தின்முன்னே! 

ஆடல் பொலிவிழக்கும் - ரம்பையரை

        ஆளுங் குலத்துப்பெண்ணே! (54)

நிறோஷ் ஞானச்செல்வம்

ஏகாந்தம் இனிக்குதடி - கண்ணம்மா

        எண்ணச் சுழலுயிர்ப்பில்

மீகாமன் ஆகிவிட்டேன் - உன்னையே

        மீட்கும் அலைகளிலே (55)


வெ.விஜய்


அலையை மிஞ்சிவிடும் - கண்ணம்மா

        ஆண்மை பெருகுதடி

விலையும் ஏதுமில்லை -  உடல்

        வித்தைகள் நிறைந்திருக்க (56)


விவேக்பாரதி


இருப்ப தோருயிர்தான் - உனக்கென 

        எழுதிக் கிழிப்பேனதைத்

திருப்பு முனையெனநீ - கண்ணம்மா 

        திசைகள் பலவிங்குநான்! (57)


நிறோஷ் ஞானச்செல்வம்


நாதத்தில் அநாகதமே - கண்ணம்மா

        ஞானத்துப் பொற்சுடரே

பாதத்து மென்மையினால் - இங்குற்ற

        பஞ்செல்லாம் நாணுதம்மா (58)


வெ.விஜய்


மார்கழிக் காற்றினிலே - கண்ணம்மா

        மையல் கொண்டிடுவோம்

மார்புக்குள் மூச்சிரைக்கக் - கண்ணம்மா

        மன்மதம் கண்டிடுவோம் (59)


விவேக்பாரதி


கண்டிடக் கண்களும்நீ - கண்ணம்மா 

        காண்கின்ற காட்சியும்நீ 

உண்டிடத் தேனடைநீ - நானிங்கே

        உயர வருங்கரடி! (60)


தொடரும்...


Comments

  1. கரடி விடுதல் போல் - ஊரார்
    கதைகள் பிதற்றுகிறார் .
    புரளி கிளப்புகிறார் , கண்ணம்மா
    பொய்யை மெய்யாக்குவோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (31-40)

கோபச் செந்நிறமோ கண்ணம்மா! (41-50)